நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் செய்தியாளர்களை  சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். மேலும் மக்களோடும், கழகத் தொண்டர்களோடும் தொடர்பு கொள்ளும் வகையில் புரட்சி பயணத்தை எங்கு ? எவ்வாறு ?  நடத்துவது என்பது பற்றியும் விவாதித்தோம்.

அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவெடுத்து இருக்கின்றோம். மேல்முறையீடு – சட்டப் போராட்டம் ஒரு பக்கம், மக்களை சந்திக்கின்ற புரட்சி பயணம் இன்னொரு பக்கம் தொடரும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

மற்றபடி இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலை பொருத்தவரை நாங்கள் எப்போதும் சொல்லி வந்ததைப் போல பழனிச்சாமி அவர்களை நம்ப முடியாது என்பதை மீண்டும் அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அகில இந்தியாவுக்குமே வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  ஆகவே அரசியலில் நம்பகத்தன்மை என்பது ஒரு அடிப்படை பண்பு. தலைவருக்கு இருக்க வேண்டும்.

சாதாரணமாக கடைக்கு ஒரு பொருளை வாங்க பையனை அனுப்ப வேண்டும் என்றாலும் கூட நம்ப தகுந்தவனை தான் நாம் அனுப்புவோம். அதேபோல தமிழ்நாட்டு மக்கள் சார்பாக ஒரு நாட்டை ஆளுகின்ற உரிமையை யாரிடம் தருவது என்ற  நம்பிக்கை எனது அருமை ஓபிஎஸ் அவர்கள்  நிரூபித்துள்ளார்.

பாஜக ஒரு கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை நீங்கள் பாஜகவிடம் கேட்க வேண்டும்.  தேர்தல் வரட்டும் அப்போது அறிவிக்கின்றோம். எங்களைப் பொருத்தவரையில் நாங்கள் ஏற்கனவே என்ன முடிவெடுத்தோமோ, அதன் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.  பாரதிய ஜனதா கட்சி என்ன செய்யப் போகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. பாரதிய ஜனதா கட்சி என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்து நாங்களும், அருமை நண்பர் ஓபிஎஸ் அவர்களும் சேர்ந்து முடிவு எடுப்போம்.