தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஜனநாயகன்’ திரைப்படம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் இப்படத்தை விநியோகம் செய்யும் ஆர்.எஃப்.டி பிலிம்ஸ் (RFT Films) நிறுவனம், 39 நாடுகளில் இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், நார்வே, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறவிருந்த காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு முக்கியக் காரணமாக, இந்தியத் தணிக்கை வாரியம் (CBFC) படத்திற்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்காததே கூறப்படுகிறது.

படத்தின் காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தணிக்கை வாரியம் படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு (Revising Committee) அனுப்பியுள்ளது.

இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் ஜனவரி 9-ஆம் தேதி காலையில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட உள்ளது. இதனால், கடைசி நேரத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ள செய்தி தளபதி ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.