தமிழ் திரையுலகின் மதிப்பிற்குரிய தயாரிப்பாளர் மற்றும் ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86.
சிறிது காலமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 5.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஏவிஎம் சரவணனுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரான ஏவிஎம் சரவணன் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. ஏவிஎம் நிறுவனம் தமிழ்த் திரைத்துறையின் பாதையை நிர்ணயித்ததில் மிகப்பெரும் பங்கு வகித்தது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் திசை நிர்ணயத்திற்கும் சரவணன் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “‘அப்பச்சி’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஏவிஎம் அவர்களுக்கு மாணாக்கனாகவும், தனித்துவமான திரைத்துறை ஆளுமையாகவும் புகழ் சேர்த்தவர் சரவணன்.
பேரறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, தலைவர் கலைஞரின் பராசக்தி, முரசொலி மாறனின் குலதெய்வம் போன்ற படங்கள் மூலம், ஏவிஎம் நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் உள்ள நெடிய பந்தம் குடும்ப உறவாகவும் வளர்ந்தது. எங்கள் குடும்பத்துடன் நெருக்கமாக பழகியவர் சரவணன்.
2023 மே மாதம் நான் ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது, அவர் அன்புடன் நினைவுகளைப் பகிர்ந்து பழகியது இன்னும் நினைவில் நிற்கிறது. அமைதியும் எளிமையும் நிறைந்த நற்பண்புகளால் அனைவராலும் மதிக்கப்பட்ட அவரது மறைவு மிகுந்த இழப்பாகும். ஏவிஎம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
