சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா தனது நகை காணவில்லை எனக் கூறி, கோவில் காவலாளி அஜித் குமார் மீது சந்தேகம் உள்ளதாக உயர் காவல் அதிகாரியிடம் வாய்மொழி புகார் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மானாமதுரை துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்தின் உத்தரவின் பேரில், 5 தனிப்படைக் காவலர்கள் அஜித் குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆனால், அந்த விசாரணை தான் பின்னர் கொடுமையாக மாறி, அஜித் குமார் உயிரிழந்த விவகாரம் பெரும் எதிர்வினையை உருவாக்கியது. அஜித் குமாரின் மரணத்துக்கு காரணமாக இருந்த 5 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள்மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சிபிஐக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளைஉத்தரவு ஒன்றை பிரபித்துள்ளது.

அதில் கூறியதாவது அஜித்குமார் கொலை வழக்கை விசாரிப்பதற்கான அலுவலர்களை ஒரே வாரத்தில் நியமித்து வழக்கு விசாரணையை ஒரே வாரத்தில் தொடங்க வேண்டும். சிபிஐ அதிகாரிகள் விரிவான விசாரணையை முடித்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்திரவிட்டார். மேலும் அஜித்குமார் கொலை வழக்கு மட்டுமின்றி நிகிதாவின் நகை காணாமல் போன வழக்கையும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.