அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு நேரில் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை அளித்தனர்.
அந்தக் கடிதத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் எக்காரணம் கொண்டும் ஏற்கக் கூடாது என இபிஎஸ் தரப்பு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அதிமுகவின் சட்டப்பேரவை குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை முறைப்படி அறிவிக்க வேண்டும் என சபாநாயகரிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்பதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. கட்சி மாறி வாக்களித்ததாக ஏற்கனவே புகார் பட்டியலுக்கு உள்ளானவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் எப்படி அவசர அவசரமாக ஏற்கலாம்? என்று இபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதால், அந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இபிஎஸ் தரப்பு அக்கடிதத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நிலையில், தற்போது அதிமுக சபாநாயகரைச் சந்தித்து புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
