அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமாரவேல், சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு , நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அண்மையில் இணைந்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் “தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது” என அடுத்தடுத்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) இந்த விவகாரத்தில் தவெக மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார். இந்நிலையில், அவரது விமர்சனங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஒரு பலவீனமான தலைமை, சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட அடுத்தடுத்த களங்களில் தான் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை மறைப்பதற்காக, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது வீண் பழி போடுகிறது. அதிமுகவில் உள்ள அக்கட்சியின் தற்போதைய மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.
மேலும் அடுத்தடுத்து தோல்விகளை மட்டுமே சந்திக்கும் ஒரு பலவீனமான தலைமையின் கீழ் தொடர்ந்து நீடிக்க அவர்கள் விரும்பவில்லை. தங்கள் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், மக்களுக்கு உண்மையாகச் சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடும், அவர்கள் எவ்வித கட்டாயமுமின்றி முற்றிலும் தங்களுடைய சுய விருப்பத்தின் பேரிலேயே தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இதில் குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தவெக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
