திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார். “கடந்த திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டிருந்தால், இன்று நாம் பல பெண்கள் மற்றும் குழந்தைகளை இழந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், இன்று நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு என் மீது பழி போடுகிறார்கள்; கண்டிப்பாக தமிழகத்தில் ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியை நான் வழங்குவேன். ஆனால், அதை உடனடியாக செய்ய முடியும் என்று கூற முடியாது, தகுந்த நேரத்தில் கண்டிப்பாக அதை நிறைவேற்றுவேன்” என்று அவர் பேசினார்.

மேலும், பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில் அதுகுறித்து பேசிய முதல்வர், “ஆட்சி அமைத்த 10 நாட்களிலேயே விவசாயக் கடன்களை என்னால் முடிந்த அளவுக்குத் தள்ளுபடி செய்துள்ளேன் என்பதை விவசாயப் பெருமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் நிதி நிலைமை முற்றிலும் காலி செய்யப்பட்டுவிட்டதால், தற்போது நிர்வாகத்தை முழுமையாகச் சீரமைத்த பின்னரே, படிப்படியாக அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும்” என்று எதார்த்தமான விளக்கத்தை அளித்தார்.