திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் சென்றுள்ள நிலையில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி மீதான விமர்சனங்களுக்கும் தன் மீதான விமர்சனங்களுக்கும் முதலமைச்சர் விஜய் பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது,

நாம் அறிவித்த 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில், 100 யூனிட் மின்சாரம் என்பது திமுக கொடுத்தது அல்ல, அது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்தது. ஆட்சி பறிபோன மனவேதனையில் ஸ்டாலின் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மக்களுக்குப் பெரும் தொல்லையாக இருந்த டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளேன். விவசாயிகளின் கடன்களை முடிந்த அளவிற்கு தள்ளுபடி செய்துள்ளேன்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை என திமுகவினர் குறை கூறுகிறார்கள். கடந்த ‘மாடல்’ ஆட்சியில் போதைப்பொருளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருந்தால், இன்று பல குழந்தைகளையும் பெண்களையும் நாம் இழந்திருக்க மாட்டோம். தற்போது திறமையான காவலர்களை நியமித்துள்ளோம். அடுத்த வாரம் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப் பெண் அதிரடிப் படை’ தொடங்கப்படவுள்ளது.

மக்களுக்காக நாம் இவ்வளவு நன்மைகளைச் செய்யும்போது, குதிரை பேரம் நடத்துவதாகப் பழி சுமத்துகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் திமுகவும் அதிமுகவும் சேர்ந்துதான் ஆட்சி அமைக்கத் திட்டமிட்டன. திமுக என்பது தற்போது வெறும் ‘தீயசக்தி’ மட்டுமல்ல, மக்களை விட்டு வெகுதூரம் சென்றுவிட்ட சக்தி. சாதி, மதம், பணம் கொடுத்து வாக்கு வாங்கும் அரசியலை நாம் உடைத்தெறிந்திருக்கிறோம். தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை எக்காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் மிக ஆவேசமாகப் பேசினார்.