திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக இப்போது வெறும் தீய சக்தி மட்டுமல்ல, மக்களை விட்டு விலகிப்போன தூர சக்தி என்று சாடிய அவர், தமிழகத்தில் போட்டி என்பது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே மட்டும்தான் என்றும், மற்றவர்களுக்கு இங்கு வேலையில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், திமுக ஆட்சியில் 100 யூனிட் இலவச மின்சாரம் கொண்டு வரப்படவில்லை என்றும், அது ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றும் சுட்டிக்காட்டிய அவர், நிதி தொடர்பான அனைத்துக் கதவுகளையும் திமுக மூடிவிட்டு தன் மீது பழி போடுவதாகவும், எத்தனை பழி போட்டாலும் மக்களுக்கான பணிகளைச் செய்து முடிப்பேன் என்றும் அதிரடியாகப் பேசினார்.

முதலமைச்சர் விஜய்யின் இந்த விமர்சனங்களுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பதில் அளித்துள்ளார். வாசுதேவநல்லூரில் திமுக எம்எல்ஏ அலுவலகத்தைத் திறந்து வைத்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த பிறகும் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து திமுகவையே குறை சொல்லிப் பேசி வருகிறார் என்று சாடினார்.

மேலும், தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து முதலமைச்சராக இருக்கும் விஜய்யிடம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்றும் கனிமொழி எம்பி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.