தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய்யை முருகக் கடவுளாக வர்ணித்துப் பாடியதோடு, தைப்பூசத் திருநாளை அவமதிக்கும் வகையில் பேசியதாகப் பாடகர் வேல்முருகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ஆம் ஆண்டு தொடக்க விழா நேற்று சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் கலந்துகொண்டு கட்சியின் கொள்கைப் பாடல்களையும், வாழ்த்துப் பாடல்களையும் பாடினார்.

அப்போது, மேடையில் பாடிய வேல்முருகன், த.வெ.க தலைவர் விஜய்யை ‘முருகக் கடவுளாக’ வர்ணித்துப் பாடல்களைப் பாடியதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருநாள் கடந்த 1-ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், “உண்மையான தைப்பூசம் இன்றுதான் (நேற்று)” என்று கூறி விஜய்யைப் புகழ்ந்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்துக்களின் புனிதமான தைப்பூசத் திருநாளையும், முருகக் கடவுளையும் அவமதிக்கும் வகையில் வேல்முருகன் பேசியுள்ளதாகக் கூறி திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் குற்றாலநாதன் என்பவர் ஆன்லைன் மூலமாகவும், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

அவர் தனது புகாரில், “பல கோடி மக்கள் வழிபடும் முருகக் கடவுளையும், அறுபடை வீடுகளில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளையும் ஒரு தனிமனிதரோடு ஒப்பிட்டுப் பேசுவது கோடிக்கணக்கான பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும். இது போன்ற மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசிய பாடகர் வேல்முருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழக வெற்றி கழகத்தின் மேடையில் பாடியதால் வேல்முருகன் அந்த கட்சியில்  இணைவதாக செய்திகள் வந்த நிலையில் அதனை அவர் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.