இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி வங்கதேசம் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. முன்னதாக தாங்கள் விளையாடும் போட்டிகளை மட்டும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் வங்கதேசம் கோரிக்கை விடுத்த நிலையில் அவர்களது கோரிக்கைகளை ஐசிசி நிராகரித்தது.

தேவையில்லாத காரணங்களுக்காக போட்டியை கடைசி நேரத்தில் ஒத்தி வைப்பது சாத்தியமற்றது எனவும் ஒருவேளை வங்கதேசம் சரியான முடிவு எடுக்காவிடில் அதற்கு அடுத்தபடியாக பட்டியலில் இருக்கும் ஸ்காட்லாந்து அணி உலக கோப்பை போட்டியில் சேர்க்கப்படும் எனவும் ஐசிசி எச்சரித்து இருந்து அதற்காக கால அவகாசம் கொடுத்தது.

இருப்பினும் வங்கதேசம் இந்தியா வர பிடிவாதம் பிடித்த நிலையில் தற்போது போட்டியிலிருந்து விலக முடிவு செய்தது. முன்னதாக ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியிலிருந்து முஸ்தபிசூர் ரகுமான் காரணமே இல்லாமல் நீக்கப்பட்டதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அதன் பிறகு டி20 உலகக்கோப்பைக்காக இந்தியா வர மறுத்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது வங்கதேசத்தில் இந்துக்கள் தொடர்ச்சியாக கொல்லப்படும் நிலையில் கொல்கத்தா அணியில் வங்கதேச அணியின் வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் பிசிசிஐ உத்தரவின் பெயரில் கொல்கத்தா நிர்வாகம் அவரை அணியிலிருந்து நீக்கியது.

மேலும் இந்த நிலையில் தற்போது டி20 உலக கோப்பை போட்டியிலிருந்து வங்கதேசம் விலகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.