பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா வர மறுத்த வங்கதேச அணிக்கு, ஐசிசி தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாதுகாப்பு காரணங்களைக் கூறி வங்கதேச அணி இந்தியா வரத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.

வங்கதேச வீரர் முஸ்தாபிஷூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியது. தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றக்கோரிய வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி திட்டவட்டமாக நிராகரித்ததோடு, 24 மணி நேரக் கெடுவும் விதித்தது.

இருப்பினும், வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், தற்போது அந்த அணியை உலகக்கோப்பை தொடரிலிருந்து நீக்கி ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசத்திற்குப் பதிலாக, ஐசிசி தரவரிசை அடிப்படையில் ஸ்காட்லாந்து அணி தொடரில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ‘சி’ பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுடன் ஸ்காட்லாந்து மோதவுள்ளது. ஐசிசியின் இந்த அதிரடி முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.