ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், T20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான ஸ்டார்க், ஆஸ்திரேலியாவின் சிறந்த வெள்ளை பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 79 விக்கெட்களை வீழ்த்தியுள்ள இவர்,- T20 -ல் சராசரி 23.81 ஆகும் .
2021ஆம் ஆண்டில் ஆஸி. அணிக்கு T20 உலகக்கோப்பை வெற்றியை தந்ததிலும் ஸ்டார்க் முக்கிய பங்கு வகித்திருந்தார். T20 போட்டிகளில் அடம் ஸாம்பாவுக்குப் பிறகு அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரராக இரண்டாம் இடத்தில் உள்ளார்.
“டெஸ்ட் கிரிக்கெட் எனது முதல் முன்னுரிமை என்றும், T20 போட்டிகளில் ஆடிய ஒவ்வொரு நொடியையும் நான் அனுபவித்தேன். குறிப்பாக 2021 உலகக் கோப்பை வெற்றியும், அப்போதைய அற்புதமான அணி மற்றும் சந்தோஷமான அனுபவங்களும் என்றும் நினைவில் இருக்கும்,” என ஸ்டார்க் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியா டெஸ்ட் தொடரும், அஷஸ் தொடரும், மற்றும் 2027 ஒடிஐ உலகக்கோப்பையும் முன்னிட்டு, தன்னை துணிச்சலாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்வது முக்கியம் எனவும் தெரிவித்தார். T20 உலகக் கோப்பைக்கு தயாராகும் புதிய பந்துவீச்சாளர்களுக்காக இடம் விட்டு தர விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது முடிவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
