செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே வெங்கடேசபுரம் ஏரிக்கரை பகுதியில், ரயில் தண்டவாளம் அருகே உள்ள புதர்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீவிபத்து காரணமாக புகை மூட்டம் அதிகமாக ஏற்பட்டு, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலும் பாதிக்கப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த இரண்டு நாட்களாக சிதம்பரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு திட்டங்களை தொடங்கி வைத்து, இன்று மதியம் 1.10 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டார். மாலை 6.15 மணிக்கு எழும்பூரில் இறங்க உள்ளதாக திட்டமிடப்பட்ட நிலையில், அச்சரப்பாக்கம் அருகே தீவிபத்து காரணமாக ரயில் தொழுப்பேடு அருகே நிறுத்தப்பட்டது.
தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு வீரர்கள் களத்தில் பணியாற்றினர். சுமார் 40 நிமிடங்கள் ரயில் அங்கு தாமதமாக நிறுத்தப்பட்டு, பின்னர் தீயை அணைத்ததும் ரயில் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டது. இந்த தாமதம் காரணமாக சுற்றியுள்ள மேலூர்த்தூர் மற்றும் அச்சரப்பாக்கம் பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
தீவிபத்தின் காரணம் என்ன என்பது குறித்து தற்போது போலீசும், ரயில்வே பாதுகாப்புப் படையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தண்டவாளம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
