தவறை உணர்ந்து மீண்டும் கட்சியில் சேர்வதாக இருந்தால் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்..

அதில், அதிமுக கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் கவனத்திற்கு!

கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால் அத்தகையவர்கள் கழகப் பொதுச் செயலாளருக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்து கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும், கழகப் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே கழக உறுப்பினர்களாக கருதப்படுவர்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.. ஆகவே கழகத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால் மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”என தெரிவித்துள்ளார்..

https://twitter.com/AIADMKOfficial/status/1678765958075404295