மத்திய கிழக்கு நாடுகளில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.12 லட்சம் கோடி வரை சொத்து மதிப்பு குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்த அச்சம் காரணமாக, இன்று வர்த்தகம் தொடங்கிய முதலே பங்குகள் விற்பனை அழுத்தத்திற்கு உள்ளாகின. முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவிய பீதி காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டுமே பெரும் சரிவைச் சந்தித்தன.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,496 புள்ளிகள் சரிந்து, 74,207 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 775 புள்ளிகள் சரிவைச் சந்தித்து, 23,002 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.

ஒரே நாளில் சந்தையில் ஏற்பட்ட இந்த திடீர் வீழ்ச்சியால், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் கோடி அளவுக்குத் துடைத்து எறியப்பட்டது. வங்கி, ஐடி மற்றும் எரிசக்தி துறை சார்ந்த பங்குகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன. மேலும் போர்ச் சூழல் தணியாத வரை சந்தையில் இந்த நிலையற்ற தன்மை நீடிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்