“கேரளா கல்வியறிவில் முதன்மையான மாநிலம்” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், தலையில் விறகுச் சுமைகளைச் சுமந்து கொண்டு சரளமாக ஆங்கிலத்தில் பேசும் கேரளப் பெண்ணின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது கேரளாவைச் சேர்ந்த பயண வோல்கர் (Travel Vlogger) ஒருவர் தனது பயணத்தின் போது, தலையில் கனமான விறகுச் சுமைகளைச் சுமந்து வந்த ஒரு பெண்ணைச் சந்தித்தார். அன்றாடப் பிழைப்பிற்காகக் கடினமான உழைப்பைச் செலுத்தும் அந்தப் பெண்ணின் முகத்தில் சோர்வுக்குப் பதில் புன்னகையே நிறைந்திருந்தது.
View this post on Instagram
கேமராவுடன் வந்த வோல்கரைப் பார்த்தவுடன், அந்தப் பெண் தூரத்திலிருந்தே, “நீங்கள் யூடியூபரா? (Are you a YouTuber?)” என்று ஆங்கிலத்தில் கேட்டு ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து அவரிடம் பேசிய வோல்கர், தான் சிங்கப்பூர் வரை செல்லத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். அதற்கு அந்தப் பெண் நகைச்சுவையாக, “நானும் உங்களுடன் வரட்டுமா? இந்த விறகுகளை உங்கள் சைக்கிளில் வைத்துவிட்டு நாம் இருவரும் சேர்ந்து பயணிக்கலாம்” என்று சரளமாக ஆங்கிலத்தில் பேசி வியப்பில் ஆழ்த்தினார்.
அந்தப் பெண்ணின் மன உறுதியைக் கண்ட வோல்கர், “நீங்கள் மிகவும் வலிமையான பெண்” என்று பாராட்டினார். அதற்கு அந்தப் பெண் மிகவும் எளிமையாக, “நான் வலிமையானவள் கிடையாது; நீங்கள் தினசரி உழைத்தால், நீங்களும் வலிமையாகி விடுவீர்கள்” என்று தத்துவார்த்தமாகப் பதிலளித்தார். வோல்கர் விடைபெறும்போது, “உங்கள் ஆங்கிலம் மிகச்சிறப்பாக உள்ளது” எனக் கூற, “பலரும் என்னிடம் இதையே கூறுகிறார்கள்” என அந்தப் பெண் புன்னகையுடன் தெரிவித்தார்.
‘கேரளக் கல்வி’ (Kerala Literacy) என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள், அந்தப் பெண்ணின் தன்னம்பிக்கையையும், உழைப்பையும், சரளமான ஆங்கிலப் பேச்சையும் பாராட்டி வருகின்றனர். “பல படித்தவர்களையே மிஞ்சும் வகையில் அவரது ஆங்கிலம் உள்ளது” என்றும், “கடினமான சூழலிலும் அவர் காட்டும் நேர்மறை எண்ணம் ஊக்கமளிக்கிறது” என்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் “நான் கேரளாவில் பிறந்து அங்கேயே இறக்க விரும்புகிறேன்” என்று அந்த வீடியோவின் இறுதியில் அவர் கூறிய வார்த்தைகள், அவர் மண்ணின் மீதான பற்றையும் பறைசாற்றுகின்றன.
