கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாகக் கூறி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது இருவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்படி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், மற்றும் இதர காவலர்கள் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் பல்வேறு முக்கியத் திருப்பங்கள் ஏற்பட்டன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர்கள் ரேவதி, பியூலா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்கள் மாவட்ட நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களும், சாட்சியங்களும் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி உயிரிழந்த ஜெயராஜ்க்கு இருதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்துள்ளது. ஆனால், கம்பு கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் கூறியுள்ளனர்.நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா மகன் கிடைத்துள்ளனர்; இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என போலீசார் அவர்களுக்குள் பேசிக் கொண்டுள்ளனர் என சிபிஐ குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 9 போலீசாரையும் குற்றவாளிகள் எனக்கூறி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
