அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

15 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், விமானம் புறப்பட்ட சில நொடிகளில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் தானாகவே அணைக்கப்பட்டுள்ளன என்பதும், இதனால் இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, விமானி ஒருவரால் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா அல்லது தானாகவே செயலிழந்ததா என்பது தெளிவாகவில்லை. இரு விமானிகளும் தாங்கள் அதைத் ஆப் செய்யவில்லை  என கூறியுள்ளனர். பின்னர் விமானி “மேடே” என அவசரக் அழைப்பு  விடுத்தபோதும், விமான போக்குவரத்துத் துறை பதிலளித்தாலும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

மிகக் குறுகிய நேரத்திலேயே, இரு என்ஜின்களும் இயங்காமல் இருந்ததால் விமானம் காற்றில் நிலையாகச் செல்ல முடியாமல் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் பல்வேறு விமானப் பயண பாதுகாப்பு விதிமுறைகள் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.

இந்த அறிக்கையின் பின்னணியில், ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் வெளியிட்ட அறிக்கையில், “விபத்துக்குள்ளான விமானத்தில் எந்தவொரு தொழில்நுட்ப குறையும் இல்லை. பராமரிப்பு பணிகள் முறையாக நடந்துவந்தன.

எரிபொருள் தரத்திலும் எந்த குறையும் இல்லை. விமானிகள் புறப்படுவதற்கு முன் தேவையான சோதனைகள் அனைத்தையும் மேற்கொண்டுள்ளனர். மேலும் சில நாட்களுக்கு முன்னரே விமானம் பரிசோதிக்கப்பட்டு சேவைக்கு தயாராக இருந்தது” எனத் தெரிவித்தார்.

AAIB சமர்ப்பித்துள்ள இது முதற்கட்ட அறிக்கையானதால், இறுதியாக  விபத்துக்குத்  என்ன காரணம்  என்பது குறித்து விரிவான விசாரணைக்கு பிறகு தான் முடிவுகள் வருமெனவும், அதற்கு முன் எந்தத் தவறும் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டதாக கருதக் கூடாது என்றும் கேம்பல் வில்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விமானங்களில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்த நிலையில், இந்த விபத்து மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் விசாரணை முடிவுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.