நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜன நாயகன்’  திரைப்படம், சென்சார் நடைமுறைகளில் அடுத்தடுத்து சவால்களைச் சந்தித்து வருகிறது. இன்று நடைபெறவிருந்த படத்தின் முக்கியமான ‘ரிவைசிங் கமிட்டி’ காட்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சில சிக்கல்கள் நீடித்து வந்தன. இதனைத் தொடர்ந்து, படத்தின் சென்சார் தொடர்பான இறுதி முடிவை எடுக்க ஏதுவாக, இன்று பிற்பகல் 2 மணிக்கு ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்கள் படத்தைப் பார்வையிடத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஆய்வுக்குப் பிறகு படத்தின் சென்சார் சிக்கல்கள் முடிவுக்கு வரும் என்றும், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், ரசிகர்களுக்குப் பேரிடியாக ஒரு தகவல் கசிந்துள்ளது. ரிவைசிங் கமிட்டியின் முக்கிய உறுப்பினர்கள் சிலருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இன்று பிற்பகல் நடைபெறவிருந்த ‘ஜன நாயகன்’ படத்தின் சிறப்புக் காட்சி மற்றும் ஆய்வுப் பணிகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் திரைப்படம் வெளியாவதற்கான காலக்கெடு நெருங்கி வரும் வேளையில், தணிக்கை நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம் படத்தின் ரிலீஸ் திட்டத்தைப் பாதிக்குமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், அடுத்த சில தினங்களில் மாற்றுத் தேதி அறிவிக்கப்பட்டு, ஆய்வுப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.