தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மொத்தம் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக, சீர்காழி தொகுதியில் மட்டும் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் மற்றும் கூட்டணி ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, சீர்காழி உட்பட ஒதுக்கப்பட்ட நான்கு இடங்களிலும் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால்  176 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காணும் நிலையில், மதிமுகவின் 4 தொகுதிகளும் இதில் அடங்கும்.  ஏற்கனவே சீர்காழியில் தனிச் சின்னம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த முடிவை மாற்றி வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வெற்றியை உறுதி செய்யவும், வாக்காளர்களிடையே குழப்பத்தைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களைச் சந்தித்த பிறகு இந்த முக்கிய முடிவை மதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணியில் சின்னம் தொடர்பான இழுபறிகள் முடிவுக்கு வந்துள்ளதோடு, பிரசாரப் பணிகள் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளன.