மொபைல் போன் ரீசார்ஜ் திட்டங்களில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த 28 நாட்கள் காலாவதி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இனி 30 நாட்கள் அல்லது ஒரு மாத காலத்திற்குச் செல்லுபடியாகும் திட்டங்களைக் கட்டாயம் வழங்க வேண்டும் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு மற்றும் டிராய் (TRAI) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுவாக ஒரு மாதத்திற்கு 30 அல்லது 31 நாட்கள் உள்ளன. ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் காலத்தை 28 நாட்களாகவே நிர்ணயித்து வந்தன. இதன் பின்னணியில் ஒரு பெரிய வணிகக் கணக்கு ஒளிந்துள்ளது. நீங்கள் ஒவ்வொரு முறையும் 28 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்யும்போது, ஆண்டு இறுதியில் 24 முதல் 30 நாட்கள் மீதமிருக்கும்.

இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 12 முறை ரீசார்ஜ் செய்வதற்குப் பதிலாக, தெரியாமலேயே 13-வது முறையாக ஒரு கூடுதல் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களிடமிருந்து டெலிகாம் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் லாபம் ஈட்டி வந்தன.

இந்த மறைமுகச் சுரண்டலுக்கு எதிராக சமூக வலைதளங்களில் மக்கள் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சதா இது குறித்துக் குரல் எழுப்பினார். “மக்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறைதான் மாதச் சம்பளம் கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது ரீசார்ஜ் மட்டும் ஏன் 28 நாட்களுக்கு இருக்க வேண்டும்?” என அவர் முன்வைத்த வாதம் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தது.

ராகவ் சதாவின் போராட்டம் மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள்: இனி அனைத்து நிறுவனங்களும் குறைந்தபட்சம் ஒரு ரீசார்ஜ் திட்டத்தையாவது ‘கேலண்டர் மாத’ அடிப்படையில் வழங்க வேண்டும். (உதாரணமாக, இந்த மாதம் 5-ம் தேதி ரீசார்ஜ் செய்தால், அது அடுத்த மாதம் 5-ம் தேதி வரை செல்லுபடியாகும்).

 ரீசார்ஜ் எப்போது முடியும் என்ற குழப்பம் இனி இருக்காது. மாதத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்தாலே போதுமானது. ஆண்டுக்கு ஒருமுறை கூடுதலாகச் செய்யப்படும் ரீசார்ஜ் தவிர்க்கப்படுவதால், சாமானிய மக்களுக்கு நேரடி நிதி ஆதாயம் கிடைக்கும்.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ (Vi) போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது ரீசார்ஜ் பட்டியலில் 30 நாட்கள் மற்றும் முழு மாதத் திட்டங்களை இணைக்கத் தொடங்கியுள்ளன. மேலும் டிஜிட்டல் இந்தியா நோக்கிய பயணத்தில், மொபைல் மற்றும் இணையம் என்பது ஆடம்பரமல்ல, அது அடிப்படைத் தேவை என்பதை உணர்ந்து மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.