கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா தொட்ட ஹெஜ்ஜூரு கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் மற்றும் நவ்யா தம்பதியினரின் ஏழு மாத ஆண் குழந்தை சின்மயி விளையாடிக்கொண்டிருந்த போது செம்பருத்தி பூவின் காம்பை விழுங்கியதில் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் நவ்யா பூஜைக்காகக் கதவு பகுதியில் செம்பருத்தி பூக்களைக் கொண்டு அலங்காரம் செய்திருந்த நிலையில் அங்குத் தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக ஒரு பூவின் காம்புப் பகுதியை எடுத்து விழுங்கியுள்ளது. சமையல் அறையில் இருந்த தாய் நவ்யா ஓடி வந்து பார்ப்பதற்குள் குழந்தையின் தொண்டையில் காம்பு சிக்கியதால் மூச்சு விட முடியாமல் குழந்தை திணறியுள்ளது.

உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு சென்ற நிலையில் அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் சுவாசக் குழாயில் செம்பருத்தி பூவின் காம்பு சிக்கி இருப்பதை உறுதி செய்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி 7 மாதக் குழந்தை சின்மயி பரிதாபமாக உயிரிழந்தது.

தனது கண் முன்னே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்ததைக் கண்டு நவ்யா மற்றும் சுதர்சன் தம்பதியினர் கதறி அழுதது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து உன்சூர் புறநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.