கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த மாணிக்கம். இவர் நேற்று தனது தொகுதியில் நடைபெற்ற பல்வேறு கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் உற்சாகமாகப் பங்கேற்றார். அதன்பின்னர் மாலை வீட்டிற்குத் திரும்பிய அவருக்கு, இன்று மதியம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து, முதற்கட்டமாக குளித்தலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி கே.எம்.சி (K.M.C) தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ-வின் உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
சிகிச்சை முடிந்து நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்” என்றனர். இதனால் திமுகவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
