தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக ஏப்ரல் 20-ஆம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. இரு தரப்பு வழக்கறிஞர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில், பரஸ்பரம் பிரிந்து விடுவது என்றும், ஜீவனாம்சம் மற்றும் சொத்து பாகப்பிரிவினை குறித்து சுமுக முடிவு எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, தாங்கள் நேரில் ஆஜராவதற்குப் பதில் காணொலி காட்சி வழியாக ஆஜராக அனுமதிக்குமாறு விஜயும் சங்கீதாவும் மனு அளித்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி எழிலரசி, அவர்கள் ஆன்லைன் மூலம் ஆஜராக அனுமதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எழிலரசி திடீரென விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். வீடியோ காலில் ஆஜராக அவர் அனுமதி அளித்ததே இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

மேலும் நீதிபதி மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான இந்த சட்டப் போராட்டமும் காலதாமதமாவது அவரது ஆதரவாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.