மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, மாநிலத்திற்கு தனிப்பட்ட கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு கல்விக் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டது. சுமார் 650 பக்கங்கள் கொண்ட இந்த வரைவு அறிக்கை 2023 அக்டோபரில் முடிவடைந்தது. ஆனால் வெள்ளப் பாதிப்பு, மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் வெளியீடு தாமதமானது. பின்னர் 2024 ஜூலை 1 அன்று இந்த அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாநிலக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல முக்கிய பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், அறிக்கை மீது அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கேட்டறியப்பட்டு, அமல்படுத்தக் கூடிய திட்டங்கள் கல்வியாண்டுக்குள் செயல்படுத்தப்படும் என்றும், எஞ்சியவை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நடைமுறைக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்கட்டமாக பள்ளிக் கல்வி அறிக்கை வெளியீடு
மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கை உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக பள்ளிக் கல்விக்கான அறிக்கையை, இன்று  வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சில திட்டங்கள் உடனடியாகவும், மீதமுள்ளவை கட்டத்தார்பாகவும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.