மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசு உருவாக்கிய ‘மாநில கல்விக் கொள்கை’யை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கையில், முதல்கட்டமாக பள்ளிக்கல்விக்கான அறிக்கை வெளியிடப்படுகிறது. பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு புதிய திட்டங்கள், பாடத்திட்ட மாற்றங்கள், கற்றல் தரத்தை உயர்த்தும் முயற்சிகள், ஆசிரியர் பயிற்சி மேம்பாடுகள் உள்ளிட்ட பரிந்துரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் கல்வி முறைகள், சமத்துவ வாய்ப்புகளை வழங்கும் திட்டங்கள், மற்றும் அரசு, அரசு உதவிப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முன்னுரிமையாக கொண்டுவரப்படுகின்றன. இதில் சாத்தியமான திட்டங்கள் நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
