தமிழகம் முழுவதும் விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் புதிய குடும்ப அட்டைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்குமாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது, தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் கோரி லட்சக்கணக்கான பொதுமக்கள் விண்ணப்பித்திருந்தனர். பல்வேறு காரணங்களால் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அட்டை அச்சிடும் பணிகள் நிலுவையில் இருந்து வந்தன. இதனால் பொதுமக்கள் புதிய அட்டைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
பொதுமக்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, தற்போது நிலுவையில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் அட்டைகளையும் தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக அச்சிட்டு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தி, அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் முழுமையாக விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்தவர்களின் விவரங்களை முறையாகவும் வேகமாகவும் சரிபார்த்து, எவ்வித தொய்வுமின்றி விநியோகப் பணிகளை விரைந்து முடிக்க மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம், புதிய குடும்ப அட்டைகளுக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்கள் விரைவில் தங்களுக்குரிய ரேஷன் பொருட்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
