தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதலமைச்சராகத் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டிலேயே, “கூட்டணி அமைப்போருக்கு ஆட்சியில் பங்கு” என்று த.வெ.க. அறிவித்திருந்தபடி, தேர்தலுக்குப்பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் வழங்கப்பட உள்ளன. இந்தச் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், அவர்களில் இருவரை அமைச்சர்களாகத் தேர்வு செய்வது குறித்து த.வெ.க. தலைமை மற்றும் காங்கிரஸ் மேலிடம் இடையே தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வந்தன.

இந்த ஆலோசனைகளின் முடிவில், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் மற்றும் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. விஸ்வநாதன் ஆகிய இருவரின் பெயர்கள் த.வெ.க. அமைச்சரவைக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாருக்கு முக்கியமான அமைச்சரவைப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மற்றொரு இடத்திற்கு நிலவி வந்த கடும் போட்டியில்மேலூர் விஸ்வநாதன் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழக அரசியல் வரலாற்றில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.