தேர்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிட்னி (சிறுநீரக) திருட்டு வழக்கு தொடர்பான தீவிர விசாரணையை போலீஸார் மீண்டும் முகாமிட்டுத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விவசாயிகளைக் குறிவைத்து, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் சட்டவிரோதமாகச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்ற பெயரில் கிட்னி திருட்டில் ஈடுபட்டது அண்மையில் அம்பலமானது.

இந்தச் சட்டவிரோதச் செயலில் நாமக்கல், திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரபல தனியார் மருத்துவமனைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மக்களவைத் தேர்தல் பணிகள் காரணமாக கடந்த சில வாரங்களாக இந்த வழக்கின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இக்குற்றச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தனிப்படை போலீஸார் தற்போது திருச்சியில் முகாமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகங்களிடம் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கின் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நாமக்கல் உள்ளிட்ட  மாவட்டங்களில் ஏழை மக்களை குறிவைத்து கிட்னி திருடப்பட்ட சமூகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய அரசு பொறுப்பேற்று நிலையில் மீண்டும் கிட்னி திருட்டு சம்பவம் பரபரப்பாக விசாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.