தமிழக வெற்றிக் கழக அரசை ஆதரித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் தன்னை நிச்சயம் காப்பாற்றுவார் என்று மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு இடையே, தவெக அரசுக்கு மன்னார்குடி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழக அரசை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளைய தினம் மட்டுமல்லாது எப்போதும் ஆதரிப்பேன்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தவெக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காரணத்திற்காக, அமமுக கட்சியிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக உள்ளார். தன்னை கட்சியிலிருந்து நீக்கியது குறித்து கருத்து தெரிவித்த காமராஜ், “தவெக அரசை ஆதரித்த காரணத்தால் என்னைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே காப்பாற்றப் போகும் முதலமைச்சர், என்னைக் காப்பாற்ற மாட்டாரா என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மீது தான் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இதன் மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகம் மீது இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இதுவரை ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது மன்னார்குடி எம்எல்ஏ காமராஜூம் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அனைவருமே ஆளுநர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் பாஜக தமிழ்நாட்டில் புகுந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.