நடிகர் ஜெய், மீனாட்சி கோவிந்த், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குநர் பாபு விஜய் இயக்கியுள்ள திரைப்படம் ‘சட்டென்று மாறுது வானிலை’. இப்படம் வரும் மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது முன்னாள் உதவி இயக்குநரான பாபு விஜய் குறித்து நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது,

“என்னுடைய மிக மோசமான காலகட்டத்தில் எனக்குப் பக்கபலமாக இருந்தவர் பாபு விஜய். ‘சர்க்கார்’ திரைப்படம் வெளியானபோது, சில அரசியல் காரணங்களால் அதன் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அப்போது நானும் பாபு விஜய்யும் காரில் அமர்ந்து கொண்டு, அந்த காட்சிகளைக் கண்ணீர் மல்கப் பார்த்தோம். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான சூழலில் அவர் என்னோடு நின்றார்.

மேலும் பாபு விஜய்யின் படைப்பாற்றல் குறித்துப் பேசிய அவர், “இந்த மேடையில் நான் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்று அவரிடம் கேட்டபோது, அவர்தான் ‘சர்க்கார்’ படத்தில் இடம்பெற்ற பழ கருப்பையா தொடர்பான சம்பவங்களை நினைவுபடுத்தச் சொன்னார். சரியான நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே ஒரு இயக்குநரின் திறமை. அது அவரிடம் இருக்கிறது” எனப் பாராட்டினார்.

என்னிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்களில் இதுவரை 12 பேர் இயக்குநர்களாகி வெற்றி பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இன்று பாபு விஜய்யின் நாள் என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது” என ஏ.ஆர்.முருகதாஸ் வாழ்த்தினார். இயக்குநர் பாபு விஜய், ஏ.ஆர்.முருகதாஸிடம் நீண்ட காலம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.