அஜித்குமார் மரணம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6-ம் தேதி மதுபோதையில் இருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில், ஆகாஷ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், போலீசாரின் இந்த விளக்கத்தை ஆகாஷின் தந்தை மறுத்துள்ளார். தனது மகனை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
