கூவத்தூரில் சசிகலாவின் காலில் ஊர்ந்து சென்று பதவியைப் பெற்றுவிட்டு, இன்று அவருக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி” என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். மதுரை திருமங்கலத்தில்  நடைபெற்ற பிரமாண்ட விழாவில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்தும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் குறித்தும் விரிவாகப் பேசினார்.

விழாவில் முதல்வர் பேசியதாவது: “மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு நீங்களெல்லாம் ரசிகர்கள் என்றால், நானும் அவருக்கு ரசிகன் தான். எம்.ஜி.ஆரை திமுக வளர்த்தது, அவர் திமுகவை வளர்த்தார். முத்தமிழறிஞர் கலைஞரைத் தனது தலைவராக ஏற்றுக்கொண்டவர் அவர். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம், இன்று யாருக்கோ அடிமை சேவகம் செய்யப் போய்விட்டது.

அண்ணா மற்றும் கலைஞரின் கொள்கைகளை மறந்து, துரோகத்தின் உருவமாக அதிமுக மாறிவிட்டதால், நீங்கள் அனைவரும் சுயமரியாதைக் கோட்டையான அண்ணா அறிவாலயத்திற்கு, அதாவது உங்கள் தாய்க்கழகத்தின் மடிக்கே திரும்பி வந்திருக்கிறீர்கள். உங்களை அண்ணாவின் தம்பிகளாகவும், கலைஞரின் உடன்பிறப்புகளாகவும் நான் மனதார வரவேற்கிறேன்.

ஓ. பன்னீர்செல்வம் குறித்துப் பேசிய முதல்வர், “அமைதி, புன்னகை என்பதைத் தாண்டி ஓ.பி.எஸ். என்றாலே ‘விசுவாசம்’ என்ற சொல்லே நினைவுக்கு வரும். மறைந்த ஜெயலலிதா தனது முதல்வர் நாற்காலியில் இவரை இரண்டு முறை அமர வைத்தார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆட்சியை, எவ்வித துரோகமும் இன்றி மீண்டும் ஒப்படைத்த நேர்மைக்குச் சொந்தக்காரர் அவர். அதனால்தான் ஜெயலலிதாவே அவரைப் புகழ்ந்து பேசினார்” என்றார்.

எடப்பாடி பழனிசாமியைச் சாடிய முதல்வர், “விசுவாசத்திற்கு ஓ.பி.எஸ். என்றால், துரோகத்திற்கு அடையாளம் பழனிசாமி. கூவத்தூரில் சசிகலாவின் காலில் தவழ்ந்து சென்று பதவியைப் பிடித்தவர், இன்று அவரையே ஒருமையில் பேசுகிறார். தன்னைத் தற்காத்துக் கொள்ள எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கத்தையே அடமானம் வைத்திருக்கிறார். பாஜக தனக்கு நல்லது செய்யும் என அவர் நினைக்கிறார், ஆனால் அந்த கட்சி யாருக்கும் நல்லது செய்யாது” என்று பேசினார். மேலும் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்த முதல்வர், “நாளை மகளிர் தினத்தைக் கொண்டாடத் தயாராகும் வேளையில், சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தி பெண்களுக்குப் பரிசளித்திருக்கிறது பாஜக அரசு. இதுதான் அவர்களின் மக்கள் நலத் திட்டம்” என்று சாடினார்.