திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில், 16 வயது சிறுவனை பிளஸ் 1 மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அம்பாசமுத்திரம் அடுத்த மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனும், அதே பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவனும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு இடையே கடந்த சில தினங்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 11-ஆம் வகுப்பு மாணவன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அச்சிறுவனை சரமாரியாக வெட்டியுள்ளான். இதில் படுகாயமடைந்த அச்சிறுவன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தான்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவனை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. எனினும், காயத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட 11-ஆம் வகுப்பு மாணவனைப் போலீஸார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமா அல்லது விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு இடையே இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு: சிறுவர்களுக்கு இடையே பெருகி வரும் வன்முறை கலாச்சாரம் குறித்துச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
