தமிழக அரசியல் களத்தில் “விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது” என்று எள்ளிநகையாடிய விமர்சகர்களின் வாயை அடைக்கும் விதமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள விஸ்வரூபம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
குறிப்பாக, “நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தபோது கூடிய கூட்டம் ஓட்டாக மாறவில்லை, அதே கதிதான் விஜய்க்கும் ஏற்படும்” என்று தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் முன்வைத்த ஆரூடங்களைத் தவிடு பொடியாக்கி, தவெக தலைவர் விஜய் தற்போது தமிழக அரசியலின் “முடிசூடா மன்னனாக” உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு முன்மாதிரியாகக் காட்டப்பட்ட தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியே, விஜய்யின் இந்த இமாலய வெற்றியைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் தான் சந்தித்த சவால்களைக் கடந்து, மக்கள் செல்வாக்கை வாக்குகளாக மாற்றிச் சரித்திரம் படைத்துள்ள விஜய்யைப் பாராட்டியுள்ள சிரஞ்சீவியின் இந்த வாழ்த்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
