தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப்படும் ‘மிலாடி நபி’ (மூஹம்மது நபியின் பிறந்த நாள்) செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து, தமிழக அரசு அந்த நாளை அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அந்த நாளில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் விடுமுறை வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிலாடி நபி தினமானது, இறைவனின் தூதராக உலகிற்கு வந்த புனித நபி முஹம்மது அவர்கள் பிறந்த நாளாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி, ஏழை, எளிய மக்களுக்கு உணவு, உடைகள் உள்ளிட்ட தானங்களை வழங்குவது வழக்கம். சமூக நல்லிணக்கத்தையும், மனிதநேயத்தையும் வலியுறுத்தும் இந்த பண்டிகையை, ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் மகிழ்வுடனும், அமைதியுடனும் கொண்டாடுகின்றனர்.
- உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
- நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை, ஒழுக்க நெறிகள் மற்றும் அவரை நினைவு கூர்ந்து, அவரைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
