நடிகர் விஜய்யின் கடைசி படமாக எதிர்பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாக கசிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நடிகர் விஜய்க்கு விடுக்கப்பட்ட மிரட்டல் என  ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது என்பது தற்செயலானது அல்ல; அது விஜய்க்கு விடுக்கப்பட்ட நேரடி மிரட்டல். இந்தப் படத்தை முடக்கியதில் எல்.முருகன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் பங்கு உண்டு. எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவிற்கு ‘பராசக்தி’ படக்குழுவை அனுப்பி வைத்ததே உதயநிதி தான்.

“ஜனநாயகன் படத்தை நிறுத்துவதற்கு பாஜக எந்த அளவிற்கு அழுத்தம் கொடுத்தது என்பது எங்களுக்குத் தெரியும். நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே, படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளனர்.

“முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தபோது, அவருக்கு இதேபோன்ற நெருக்கடிகளை திமுகவினர் கொடுத்தனர். இப்போது அதே போன்றதொரு சூழலை நடிகர் விஜய்க்கும் உருவாக்கி வருகின்றனர்” என ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.