தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் என முக்கிய அதிகாரிகள் இடமாற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையராகப் பணியாற்றி, அதன் பின்னர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP) திரு. ஏ. அருண், ஐ.பி.எஸ். அவர்கள், தற்போது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவின் (DVAC) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், காவல் துறையின் மற்றுமொரு முக்கியப் பிரிவான சட்டம்-ஒழுங்கு பிரிவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சட்டம் – ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநராக பணியாற்றி வந்த திரு. மகேஸ்வர் தயாள், ஐ.பி.எஸ். அவர்கள், அங்கிருந்து மாற்றப்பட்டு நிர்வாகப் பிரிவு ஏடிஜிபி-யாக (ADGP – Administration) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து காலியாகும் சட்டம் – ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் என்ற மிக முக்கியப் பொறுப்புக்கு திரு. அன்பு, ஐ.பி.எஸ். அவர்கள் புதிய ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல் துறையின் மிக முக்கியப் பிரிவுகளான சட்டம்-ஒழுங்கு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உயர் அதிகாரிகள் இடமாற்றம், நிர்வாகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது