கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவர் ஒருவர், கடந்த 25-ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, அந்த மாணவனின் மாமா தனக்குத் தெரிந்த வடபழனி காவல் நிலைய தலைமைக்காவலரான வேலப்பன் (35) என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்து ஒன்றாக மது அருந்தியுள்ளார். இதில் மாமா அதிக மதுபோதை காரணமாக அந்த இடத்திலேயே உறங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது போதையில் இருந்த தலைமைக்காவலர் வேலப்பன், அருகில் இருந்த அந்த சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றியதோடு, அவரிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன், தற்காப்பிற்காக அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து வேலப்பனின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். பின்னர் வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே சென்று புகார் அளித்தார்.

சிறுவனின் புகாரைத் தொடர்ந்து அசோக் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தலையில் காயத்துடன் இருந்த தலைமைக்காவலர் வேலப்பனை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அசோக் நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருவதும், வடபழனி காவல் நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்து வருவதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, போலீசார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, கைதான தலைமைக்காவலர் வேலப்பனை தற்போது  பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.