சாத்தூர் அருகே கனிஞ்சம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக பல கட்டுப்பாடுகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் விதித்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கனவே ஒரு சில விபத்துகளில் உயிரிழப்புகளும், படுக்காயங்களும் ஏற்பட்டுள்ளன. அதனை கருத்தில் கொண்டு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கணிஞ்சம்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் மீண்டும் ஒரு பட்டாசு வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். தற்போது வரை 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அண்மை தகவல் தெரிய வருகிறது.

இதில் மாரீஸ்வரன், கருப்பசாமி, மாரிமுத்து, ராஜ்குமார் ஆகியோருக்கு 100% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நிகழ்வு இடத்திற்கு தற்போது தீயணைப்புத் துறையினர் சென்று அங்கு தீயை அணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. பட்டாசு  வெடி விபத்தில் 8 அறைகள் தரைமட்டமானது. இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..