மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுபட்டியில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வெளியில் உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் இன்று நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு முன் அனுமதி பெற்ற கடிதத்துடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். அதேபோல் வாகனங்களில் காளைகளைக் கொண்டு வருபவர்கள் கால்நடை மருத்துவரின் தகுதி சான்று மற்றும் மஞ்சுவிரட்டில் கலந்து கொள்வதற்கான தகுதி சான்றினை பெற்றிருந்தால் மட்டுமே சோதனை சாவடியில் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

மேலும் காளைகளை ஏற்றி வரும் வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் வரக்கூடாது. அதேபோல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் போதைப்பொருட்கள் உட்கொண்டிருக்கக் கூடாது. காளையர் கோவில் பகுதிகளில் இருந்து வரும் காளைகள் முத்தூர், வானியக்குடி, சிறு செங்குளிப்பட்டி, கொல்லங்குடி வழியாக  மஞ்சுவிரட்டு நடைபெறும் பகுதிக்கு செல்ல வேண்டும். அதேபோல் திருப்பத்தூர் வழியாக வரும் காளைகள் இளந்தமங்கலம், மாங்குடிபட்டி, பாகனேரி வழியாக செல்ல வேண்டும். மேலும் காரைக்குடி மற்றும் கல்லல் பகுதிகளில் இருந்து வரும் காளைகள் பழங்குடி நடராஜபுரம் வழியாக செல்ல வேண்டும். சிவகங்கை பகுதிகளில் இருந்து வரும் காளைகள் நாட்டரசன் கோட்டை, கவுரிப்பட்டி வழியாக செல்ல வேண்டும்.

மேலூர் பகுதிகளில் இருந்து வரும் காளைகள் ஒக்கூர், காளையர் மங்கலம், சின்னுடையான் பட்டி வழியாக மஞ்சுவிரட்டு நடைபெறும் பகுதிக்கு செல்ல வேண்டும். வாடி வாசலை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அனுமதிக்கப்படாத இடங்களிலும் காளைகளை அவிழ்த்து விடக் கூடாது. அப்படி மீறி விடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதனால் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.