தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனா அண்மையில் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலும், தனக்கு ஆதரவாக நின்ற அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அந்த அவதூறான கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகப் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தனது இக்கட்டான சூழலில் கட்சிப் பாகுபாடின்றி ஆதரவு அளித்த ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களையும் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் பட்டியலிட்டு நன்றி கூர்ந்துள்ளார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி,
விசிக தலைவர் தொல். திருமாவளவன், மற்றும் எஸ்பி வேலுமணி, அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்கியுள்ளார். அறிக்கையின் இறுதியில் ரஜினிகாந்த் தனது பாணியில் ஒரு முக்கியக் கருத்தைப் பதிவு செய்துள்ளார். “காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என்ற வாசகத்துடன் தனது அறிக்கையை அவர் நிறைவு செய்துள்ளார்.

“வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!!!” என்ற முழக்கங்களுடன் வெளியாகியுள்ள இந்த அறிக்கை, தற்போது தமிழக அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.