மத்திய கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் அரசியல் போர் நிலவி வரும் சூழலில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. இதில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து மீண்டும் சுவேந்து அதிகாரி களம் இறக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சுவேந்து அதிகாரி, இந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார். அவர் தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் நந்திகிராம் தொகுதியுடன் சேர்த்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பபானிபூர் தொகுதியிலும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 2021 தேர்தலின் போது நந்திகிராமில் மம்தா பானர்ஜியை சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் மம்தாவுக்கு எதிராகவே அவர் களம் இறக்கப்பட்டு இருப்பது அம்மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் கலை மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திலீப் கோஷ்: மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவரான இவர், கரக்பூர் சதர் தொகுதியில் போட்டியிடுகிறார். அக்னிமித்ரா பால்: பிரபல ஆடை வடிவமைப்பாளரான இவர் அசன்சோல் தெற்கு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அசோக் திண்டா: இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் மொய்னா தொகுதியில் களம் காண்கிறார். ருத்ரநீல் கோஷ்: பிரபல நடிகரான இவருக்கு ஷிப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. மம்தா பானர்ஜியின் கோட்டையாகக் கருதப்படும் பபானிபூரில் சுவேந்து அதிகாரி களம் இறங்கியுள்ளதால், அங்கு போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.