காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐகோர்ட் விஜிலன்ஸ் பதிவாளர் தாக்கல் செய்துள்ளார்.
காஞ்சிபுரத்தில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதாகக் கூறி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்மல், டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, காஞ்சிபுரம் எஸ்.பி, டிஎஸ்பி மற்றும் வாலாஜாபாத் ஆய்வாளர் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, விசாரணை மேற்கொள்ள விஜிலன்ஸ் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
இதற்கமைய, மாவட்ட நீதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையை, விஜிலன்ஸ் பதிவாளர் இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் நீதிபதி செம்மல் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே காஞ்சிபுரம் டிஎஸ்பிஐ சிறையில் அடைக்க உத்தரவிட்டது தெரிய வந்தது. மேலும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என தெரியவந்துள்ளதால் தற்போது நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
