அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் இலக்குடன் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார். இன்று காலை, குன்னூர் பஸ் நிலையம் அருகே திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தி.மு.க. ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார். “தமிழ்நாடு முழுவதும் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் ஏழை மக்களின் எட்டாத அளவுக்கு உயர்ந்துவிட்டன. ஆனால், தி.மு.க. அரசு அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஏழை மக்களை பற்றிக் கவலைப்படாத ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான்,” என்றார் அவர்.
ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் வாகன வருகை கட்டுப்பாடுகள் காரணமாக வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், “அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், இதுகுறித்து நீதிமன்றத்தை நாடி, வியாபாரிகளின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்” என்றும் உறுதி அளித்தார்.
“தமிழகத்தில் தற்போது 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 1.5 கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதை அந்த் துறை அமைச்சரே ஒப்புக்கொண்டார். அதன் மூலம் நாளுக்கு ரூ.15 கோடி வருமானம், மாதத்திற்கு ரூ.450 கோடி, வருடத்திற்கு ரூ.5,400 கோடி வரை வருமானம் உருவாகிறது. கடந்த 4½ ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது,” என்றார்.
“இந்த தொகை எங்கு செல்கிறது? எவ்வளவு பாட்டில் திரும்பப் பெற்றீர்கள்? எந்த கணக்கிலும் பதிலில்லை. அமைச்சர் தான் இதை ஒப்புக்கொண்டுள்ளார். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், இந்த முறைகேடுகளை விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுப்போம்,” என்று வலியுறுத்தினார்.
அதன்பிறகு “நகராட்சிகளில் சொத்து வரி, குடிநீர் வரி, வீட்டு வரி உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வை சுரண்டும் ‘கொள்ளை அரசு’ தி.மு.க,” என்றார் பழனிசாமி. “தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் பல பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. 2026-ல் ஆட்சி அமைந்தவுடன், தமிழ்நாட்டை ‘போதை இல்லாத தமிழகம்’ ஆக்குவோம்,” என்று உறுதியளித்தார்.
அ.தி.மு.க அலுவலகம் டெல்லியில் உள்ளது என மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி கூறியதைக் குறிப்பிட்ட அவர், “அ.தி.மு.க அலுவலகம் சென்னையில்தான் உள்ளது. வந்து பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் ஆள் வைத்து உடைக்க முயற்சித்தீர்கள். ஆனால் நொறுக்க முடியவில்லை. அ.தி.மு.கவை யாராலும் பிளக்க முடியாது,” என கூறினார். “தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, தி.மு.கவிலிருந்து விலகியவர்கள், கட்சி அலுவலகத்தை கைப்பற்ற முயன்றனர். அப்போது அதை பாதுகாத்தது அ.தி.மு.க; அந்த முயற்சியை தடுத்து நிறுத்தியது ஜெயலலிதா என்பதையும் மறக்கக்கூடாது,” என்றார்.
மேலும் “அ.தி.மு.க உழைப்பால் உயர்ந்த கட்சி. எத்தனை சதிகள் நடைபெற்றாலும், எங்களது தொண்டர்கள் மட்டுமே கட்சியை தாங்கி நிறுத்தியுள்ளனர். ஸ்டாலின் எத்தனை அவதாரங்கள் எடுத்து வந்தாலும், அ.தி.மு.கவை அசைக்க முடியாது,” என்றார் பழனிசாமி.
