கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால், 39 பேர் உயிரிழந்தது வருத்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் இடமளித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சரிடம், “விஜய் கைது செய்யப்படுவாரா?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: “அதற்காகத்தான் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் விசாரித்து முழுமையான தகவல்களுடன் உண்மையை வெளியிடும். அந்தத் தருணத்திற்கு முன்பாக, அரசியல் நோக்கத்தோடு எந்தவிதமான கருத்தும் தெரிவிக்க நான் விரும்பவில்லை. மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்ல விரும்புகிறேன் – ஆணையம் தான் உண்மையை வெளிக்கொணரும். உண்மை வெளிவந்ததும், அரசாக நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம்.” இவ்வாறு தெரிவித்தார்.