தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவிற்குப் பிறகு பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை விரைவில் வெளியிடப்போவதாகத் தெரிவித்தார்.
பதவியேற்பிற்குப் பின் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய முதல்வர் விஜய், “சினிமாவில் வெற்றி பெறத் துடித்த ஒரு உதவி இயக்குநரின் மகனாகவே நான் அறிமுகமானேன். வறுமையும், பசியும் என்றால் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் ஏதோ மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல; உங்கள் குடும்பத்தில் ஒருவன் தான். அதை உணர்ந்ததால்தான் சினிமாவில் எனக்குப் பெரிய இடத்தைக் கொடுத்தீர்கள். இப்போது எனக்குப் பின்னால் உறுதுணையாக நின்று ‘சி. ஜோசப் விஜய் என்னும் நான்’ என்பதை உண்மையாக்கி இருக்கிறீர்கள்,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தமிழக அரசின் தற்போதைய நிதி நெருக்கடி குறித்துப் பேசிய அவர், “முந்தைய அரசு தமிழகக் கஜானாவைச் சுத்தமாகத் துடைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளது. மிக மோசமான நிதி நிலைமையில்தான் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ளது. தமிழக அரசு என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்த ‘வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்,” என்றார்.
தன்னுடைய ஆட்சி நிர்வாகம் குறித்துப் பேசிய அவர், “நான் ஒன்றும் தேவதூதன் கிடையாது, உங்களைப் போன்ற சாதாரண மனிதன் தான். என்னால் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே சொல்வேன். தேவையற்ற பொய் வாக்குறுதிகளை நான் ஒருபோதும் அளிக்க மாட்டேன். நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அதற்குச் சிறிய அவகாசம் மட்டும் கொடுங்கள். இது உங்கள் ஆட்சி,” எனத் தனது உரையில் முதல்வர் விஜய் சூளுரைத்தார்.
அரசியல் பயணத்தில் பல அவமானங்களையும், கஷ்டங்களையும் கடந்தே இந்த இடத்தைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் அன்பே தன்னை இந்த உயரத்திற்கு ஏற்றி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
