இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (CDS) லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய சிடிஎஸ் ஜெனரல் அனில் சௌஹான் வரும் மே 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்குப் பின் அந்த உயரிய பொறுப்பை ராஜா சுப்ரமணி ஏற்கவுள்ளார். 1985-ல் கார்வால் ரைபிள்ஸ் படையில் தனது பயணத்தைத் தொடங்கி, லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதுகலை பட்டம் வரை பயின்ற இவர், 35 ஆண்டுகளுக்கும் மேலான தனது பணிக்காலத்தில் பல்வேறு சவாலான போர்க்களங்களைக் கையாண்ட அனுபவம் கொண்டவர்.

வெறும் தலைமைத் தளபதியாக மட்டுமல்லாமல், மத்திய அரசின் இராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் இவர் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. பரம் விசிஷ்ட் சேவா உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள ஒரு தமிழர், இந்திய ராணுவத்தின் உச்சபட்சப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தேசத்திற்கே பெருமை சேர்க்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.