உலகிலேயே முதல் முறையாக சமூக வலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், எக்ஸ் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களை 16 வயதுக்குள் உள்ளவர்கள் பயன்படுத்த தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், யூடியூப் செயலிக்கு அப்போது விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போதைய முடிவில் யூடியூபும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 16 வயதுக்கு குறைவானவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை செய்யப்படுவார்கள் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பொதுவாக வீடியோக்கள் பார்வையிடும் வகையில் யூடியூப்பை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். குழந்தைகள் தங்களுக்கென தனி சேனல் தொடங்குவதோ, வீடியோக்கள் பதிவேற்றுவதோ தடை செய்யப்படுகிறது.

இந்த முடிவை வெளியிட்ட ஆஸ்திரேலிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அனிகா வெல்ஸ், “ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளில் 10-ல் 4 பேர், யூடியூப்பில் கிடைக்கும் கருத்துகள் மற்றும் உள்ளடக்கங்களால் பாதிக்கப்படுகின்றனர்” எனக் கூறினார். புதிய வயது வரம்பு விதிகள் இந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும், இந்த சட்டத்தை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 33 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, யூடியூப்பின் தாய் நிறுவனம் ஆல்பாபெட் வெளியிட்ட அறிக்கையில், “ஆஸ்திரேலிய அரசின் நோக்கை மதிக்கிறோம். ஆனாலும், யூடியூப் என்பது சமூக ஊடக தளம் அல்ல. இது இலவசமாகக் கிடைக்கும் உயர்தர உள்ளடக்கங்கள் நிறைந்த ஒரு வீடியோ நூலகமாகும். இதனை பெரும்பான்மையினர் தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்கிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் ஆஸ்திரேலிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என தெரிவித்தது. மேலும், இந்த முடிவை சர்வதேச அளவில் ஆதரவு பெறும்படி ஐ.நா. மன்றத்தில் பிரசாரம் செய்யும் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
